ஈரோடு பவானி சாலைப் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் சாயத் தொழிற்சாலை, சலவைத் தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை ஆகியவற்றில் பணியாற்றி தினசரி கூலிகளைப் பெற்று வாழும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து வகை தொழிற்சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் வருவாயின்றி அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தளர்வு விதியில் பல லட்சம் தொழிலாளர்கள் நம்பி வாழ்ந்து வரும் தொழிற்சாலைகளைத் திறந்து தங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவாய்க்கு வழி காட்டிட வேண்டும் என்றும், இல்லையென்றால் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறவரை தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை தட்டுபாடுகளின்றி தாராளமாக வழங்கி உதவிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டனர்.
ஆனால், கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.