ஈரோடு: ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்க வேண்டுதல், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிடுதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று (ஜன.9) அதிகாலை 4 மணியளவில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, சி.பி.எம், பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர், சத்தியமங்கலம் போக்குவரத்து பணிமனை முன்பாக போராட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிமனையில் இருந்து வெளியே வரும் பேருந்தை வழிமறித்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சத்தியமங்கலம் காவல் துறையினர், அரசுப் பேருந்துகளை மறிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். அதன் பின்னர், சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர், அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் பணிமனையிலிருந்து பேருந்து நிலையத்திற்குச் சென்றன. முன்னதாக, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சங்கத்தினர், வழக்கம் போல் பேருந்தை இயக்குவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், அச்சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் சிலர் விடுமுறையில் இருந்த போதிலும் வந்து பேருந்துகளை இயக்கினர்.