உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்துவரும் நிலையில், மாணவர்களின் கல்வி முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. அனைத்து மாணவர்களும் இணைய வசதியை பெறமுடியாது, கல்வி சமநிலையற்ற நிலையில் கொடுக்கப்படுகிறது என விவாதங்கள் எழுந்தன.
இதனிடையே, அவர்களைத் தவிர்த்து கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள், மனநலம் குன்றிய குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்து சிந்திக்க வேண்டியதும் அவசியமாகிறது.
இது குறித்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மனநல மருத்துவரும் ஆலோசகருமான டாக்டர் அசோக்கிடம் ஈடிவி பாரத் சார்பில் பேசினோம். அவர் கூறுகையில், ”கற்கும் திறனும், ஆர்வமும் இருந்தாலும் கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மெதுவாகத்தான் கற்றுக்கொள்வார்கள்.
இவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்களை வைத்து கற்றுக் கொடுப்பது அவசியம். மாறாக, பெற்றோர் கற்றுக் கொடுப்பது கடினம். வீட்டில் வசதியாக இருந்துவிட்டு திடீரென ஆன்லைன் வகுப்பு என்றால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது” என்றார்.
ஆன்லைன் கல்வி, கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஏற்றதா? ஆசிரியர்கள் அருகில் இருந்து கற்றுக் கொடுக்கும்போது குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. ஆனால் தற்போது அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்று வரும்போது வீட்டில் இருந்து கற்றுக்கொள்ளும் சூழல்தான் ஏற்படும்.
”ஆன்லைன் வகுப்பு இருப்பதாக கூறினாலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சிறப்பு கவனம் எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பிட்ட நேரம் மட்டும் இல்லாமல் பெற்றோர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் குழந்தைகளுக்கு தொடர்பயிற்சி அளிப்பது முக்கியம். அது மட்டுமல்லாமல் பள்ளிகளில் பெரிய திரைகளில் பாடம் எடுப்பதால் குழந்தைகள் படிப்பில் முழு ஈடுபாடு காட்ட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆன்லைன் வகுப்புகளில் செல்போன் அல்லது லேப்டாப் போன்றவற்றில் பாடம் நடத்துவதால் மனநலம் பாதித்த அல்லது கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் அதனை ஒரு விளையாட்டு பொருளாக மட்டுமே பார்ப்பார்கள்.
இதனைக் கற்றுக்கொள்வதற்கான ஊடகமாக கருதமாட்டார்கள். மேலும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில் கற்றுக்கொள்வதில் அயற்சி அல்லது சோர்வு கூட ஏற்படலாம்” என்கிறார் மருத்துவர் அசோக்.
இதற்கான தீர்வு குறித்து கேட்கையில், “ தொலைக்காட்சி போன்ற பெரிய திரையில் கற்றுக்கொள்வதில் சற்று முன்னேற்றம் ஏற்படலாம். நேர அட்டவணை இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை மனரீதியாக தயார்படுத்த ஏதுவாக இருக்கும்.
குழந்தைகள் ஏற்கனவே பார்த்து பழகிய ஆசிரியர்களை வைத்து சொல்லிக்கொடுத்தால் இன்னும் சுலபமாக இருக்கும். அரசு பெற்றோருக்கு இது குறித்து விழிப்புணர்வு அளிக்க வேண்டும்” என்றார்.
காட்சி ஊடகங்கள் வழியே கல்வியை கொடுப்பதில் இருக்கும் சிக்கல்கள்? ஆன்லைன் வகுப்பு என்பதே காட்சி ஊடகம் எனும் பட்சத்தில் பார்வை திறன் குறைந்த குழந்தைகள் கல்வி வெகுவாவே பாதிக்கும் வாய்ப்புள்ளது. அரசு இவர்களுக்கென தனிக் கவனம் எடுப்பது அவசியம்.
இதையும் படிங்க: ஆன்லைன் கல்வியால் தீங்கு அதிகம் - கதறும் பெற்றோர்கள்!