கிடாவின் விலை கிடுகிடுவென உயர்வு! ஏன் தெரியுமா? ஈரோடு: பழங்காலங்களில் இருந்தே மக்கள் தெய்வங்களுக்கு நேற்றிக்கடனுக்காக கிடாக்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதிலும், முக்கியமாக கருப்புசாமி, அய்யனார், பாண்டி சுவாமி போன்ற சுவாமிகளுக்கு கருப்பு நிற கிடாக்களை வெட்டுவதுதான் சம்பரதாயமாக கூறுகின்றனர். குறிப்பாக அந்த கருப்பு ஆட்டில் ஒரு துளி அளவு கூட வெள்ளை நிறமோ அல்லது வேறு எந்த நிறமுமோ கலந்து இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
மேலும் பெண் ஆடுகளைக்காட்டிலும், ஆண் கிடாக்களையே பெரிதும் விரும்புகின்றனர். அதற்காகவே இவ்வகையான ஆடுகள் வளர்க்கப்பட்டு, குறிப்பிட்ட சீசனில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையான கருப்பு கிடா ஆடுகளுக்கு திடீரென விலை அதிகரிப்பதால், சிலர் 6 மாதம் அல்லது ஒரு வருடங்களுக்கு முன்னரே பிறந்த குட்டிகளை வாங்கி வளர்க்கின்றனர். அதற்கு பின்னர் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
குறிப்பாக கருப்பு நிற கிடாக்கள் பெரும்பாலும் இறைச்சி தேவைக்காகவும், ரோம உற்பத்திக்காகவும் வளர்க்கப்படுகிறது. இந்த கருப்பு நிற கிடா ஆடுகள் அதிகமாக திருச்சி, ஈரோடு, தருமபுரி, சேலம் போன்ற பல மாவட்டங்களில் பரவலாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தும், இவ்வகை கிடாக்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
தற்போது சத்தியமங்கலம் வட்டாரத்தில் மாரியம்மன் கோயில் பண்டிகையொட்டி பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பொங்கல் விழாவில் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக கறுப்பு கிடா வெட்டி படையலிட்டு வழிபடுவது வழக்கம் என்கின்றனர். மேலும் நாளை புதன், வியாழக்கிழமை நாள்களில் 50-க்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களில் பொங்கல் விழா நடைபெறுகிறது.
அதனால் சத்தியமங்கலம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சத்தியமங்கலம், சிக்கரசம்பாலையம், நால்ரோடு, கெம்பநாயக்கன்பாளையம், செண்பகபுதூர், புளியம்கோம்பை பகுதியில் இருந்து 300 ஆடுகள் மட்டுமே விவசாயிகள் கொண்டு வந்தனர். கடந்த வாரம் 600 ஆடுகள் வந்த நிலையில், தற்போது கோயில்களில் பொங்கல் விழா காரணமாக ஆடுகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் 6 கிலோ எடை கொண்ட கறுப்பு ஆடு ரூ.4500 விற்கப்பட்ட நிலையில், இன்று 6,200 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது 1 கிலோ 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளாடு, செம்மறி, கரும்பை ஆடுகள் குறைந்த பட்ச மாக ரூ.5200 முதல் 15 ஆயிரம் வரை விற்பனையானது. சுமார் 20 கிலோ எடை கொண்ட கிடா ரூ.17 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஆனால் மற்ற ஆடுகளைக் காட்டிலும் கறுப்பு நிற ஆடுகள் வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. பண்டிகை காலம் என்பதால் கோயில் நிர்வாகிகள் கிராமங்களுக்கே நேரடியாக சென்று கறுப்பு ஆடுகள் வாங்குவதால் வரத்து குறைந்து விலை கிடுகிடுவென ஏறியுள்ளது என்கின்றனர்.
இதையும் படிங்க: MI vs LSG: லக்னோ - மும்பை பலப்பரீட்சை; பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கப் போவது யார்?