ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும், வயது மூத்தவர்கள், கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் தபால் வாக்கு செலுத்துவதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் அதற்கான படிவங்களை வீடு வீடாகச் சென்று 321 பேரிடம் வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று (பிப்.16) இந்த தபால் வாக்குக்கானது பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே ஈரோடு வலையக்கார வீதியில் வசித்து வரும் மாணிக்கம்மாள் என்ற மூதாட்டியிடம், திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் தபால் வாக்கை கை சின்னத்திற்கு பதிவு செய்ததாக புகார் எழுந்தது.
இந்தப் புகாரை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் ஆகியோர், தபால் வாக்குகளை சேகரித்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் அதிகாரிகளை தபால் வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாநகராட்சி ஆணையாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவகுமார், அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.