ஈரோடு:அரசு வேலை பெற்று தருவதாக வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்த ஜோதிடரை, ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ள நிலையில், மோசடியில் தொடர்பு கொண்டு தலைமறைவாக உள்ள அவரது மனைவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கவுந்தபாடி பகுதியை சேர்ந்தவர் அன்பானந்தன். ஜோதிடர் தொழில் செய்து வரும் இவரிடம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம். இந்நிலையில், இவரிடம் ஜோதிடம் பார்க்க வந்து பழக்கம் ஏற்பட்டு, செங்குத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி-சண்முகசுந்தரம் தம்பதியினர் உறவினராயுள்ளனர்.
இதனையடுத்து, இவர்களின் மகனுக்கு மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 20 லட்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக வேலை வாங்கி தராததால், தாங்கள் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த ஈஸ்வரி, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஈரோடு, ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பூவழகன் (வயது 37) ஈரோடு எஸ்.பி. ஜவகரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மலுவில், "பட்டதாரியான எனக்கு ஜோதிடரான அன்பானந்தன், கோகிலாம்பாள் தம்பதியினரிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர் தமிழக அரசு அதிகாரிகள் எனக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். எனவே, வருவாய் துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு இதுவரை வேலையும் வாங்கி தரவில்லை, பணமும் திருப்பி தரவில்லை. இதே போல் அரசு வேலை வாங்கி தருவதாக, ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த மலர்கொடி தியாகராஜன் தம்பதியினரிடம் ரூ. 5 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளனர். எனவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் ஜோதிடர் அன்பானந்தன் மற்றும் அவரது மனைவி கோகிலாம்பாள் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, நேற்று ஜோதிடரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அன்பானந்தனின் மனைவி கோகிலாம்பாளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜோதிடம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களிடம் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக, ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த ஜோதிடரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:முதன்முறையாக தருமபுரி வந்த வந்தே பாரத் ரயில்.. பொதுமக்கள் செல்பி எடுத்து உற்சாக வரவேற்பு!