காதலிக்கு பாலியல் தொல்லை- வயதான தம்பதியை கொலை செய்த 4 பேர் கைது - வயதான தம்பதி
ஈரோடு: சென்னிமலை அருகே காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர், அவரது மனைவியை கொலை செய்த வழக்கில் காதல் ஜோடி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த எக்கட்டாம் பாளையத்தில் பிப்ரவரி 19ம் தேதி வயதான தம்பதியினரான துரைசாமியும் துளசிமணியும் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சென்னிமலை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் கொலை சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த செல்லிடப்பேசி கோபுரங்களில் பதிவான செல்லிடப்பேசி எண்கள், உரையாடல்களின் அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த காதல் ஜோடிகளான ராஜா, அவரது மனைவி சாஹிரா பானு ஆகியோர் இக்கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சென்னிமலை காவல் துறையினர் பேராவூரணியில் பதுங்கியிருந்த ராஜாவையும் சாஹிராபானுவையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது காதல் ஜோடிகளான ராஜாவும் சாஹிராபானுவும் திருமணத்திற்கு பிறகு திருப்பூர் மாவட்டம் திட்டுபாறை பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்துவந்துள்ளனர். அப்போது பழக்கமான துரைசாமியின் தோட்டத்தில் தேங்காய் கொள்முதல் செய்துவந்தனர்.
இந்நிலையில் பிப்ரவரி 11ம் தேதி துரைசாமியின் தோட்டத்திற்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது ராஜா தேங்காய் பாரம் ஏற்றிச் சென்ற நிலையில் தனியாக இருந்த சாஹிராபானுவை துரைசாமி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாஹிராபானு தனது கணவர் ராஜாவிடம் தெரிவித்ததையடுத்து ராஜா அவரது நண்பர்களான மணிகண்டன், ஹிஜாஸ் அகமது ஆகியோருடன் சேர்ந்து துரைசாமியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த துரைசாமியின் மனைவி துளசி மணியையும் கொலை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் ராஜா, மணிகண்டன், இஜாஸ் அகமது, சாஹிராபானு ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.