ஈரோடு சென்றடைந்த கோயம்புத்தூர் - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் ஈரோடு:பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக கோயம்புத்தூர் - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை இன்று (டிச.30) துவக்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு நண்பகல் 1.30 மணிக்கு வந்தது. ஈரோடு ரயில் நிலையம் சென்றடைந்த வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள், பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த ரயிலில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி, சொகுசு இருக்கைகள், கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் என பல்வேறு நவீன வசதிகளும் உள்ளது. எட்டு பெட்டிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில், வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் காலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு, 11.30 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. மறு மார்க்கமாக, பிற்பகல் 1.40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, இரவு 8 மணி அளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
இந்த ரயில் வியாழக்கிழமை தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகிறது. தொழில் நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் இடையே அதிவிரைவு ரயில் சேவைகள் தேவை அதிகளவில் உள்ளது என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்திய அரசின் இந்த வந்தே பாரத ரயில் சேவை ஈரோடு, கோயம்புத்தூரில் உள்ள தொழில்துறையினர், ஐடி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஜவுளித் துறையினர் என பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கும் என கருதப்படுகிறது. மேலும், ஈரோடு ரயில் நிலையத்தைச் சென்றடைந்த வந்தே பாரத் ரயிலுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வேதானந்தம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தாமிரபரணி நீர் வரத்து அதிகரிப்பு-நெல்லை மலைகளில் மீண்டும் தொடர் மழை