ஈரோடு மாவட்டம் :தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில் ஈரோடு கடைவீதிப்பகுதியில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் கூடி தங்களுக்குத் தேவையான துணி ரகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்து மக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில் மக்கள் தங்களுக்குத் தேவையான ஜவுளி ரகங்களை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
ஈரோடு கடைவீதிப் பகுதியில் வழக்கத்தைவிட அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. கடைவீதிப் பகுதியிலுள்ள கனிமார்க்கெட், சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள ஜவுளி விற்பனை நிலையங்கள் முதல் பெரிய விற்பனை நிலையங்கள் வரை மக்கள் அதிக அளவில் துணிகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் அனைத்து விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதேபோல் கடந்தாண்டை விடவும் கூடுதலான கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பெரிய ஜவுளி விற்பனை நிலையங்களில் கடந்தாண்டை விடவும் இந்தாண்டு கூடுதலான விலையில் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
கடைவீதிப் பகுதியில் கூடியுள்ள பெருங்கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவல்துறையினர் தற்காலிகக் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தும் கூட்டத்தைக் கண்காணித்து, ஒலிப்பெருக்கியில் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.