ஈரோடு:கடந்த ஒரு வாரமாக சத்தியமங்கலம் வட்டாரத்தில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வமாக இருந்த நிலையில் தடுப்பூசி விநியோகம் இல்லாததால் தினந்தோறும் மக்கள் தடுப்பூசி கேட்டு விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஆக.14) 10,200 தடுப்பூசிகள் வந்தன. இதில் 1,400 தடுப்பூசி சத்தியமங்கலம் வட்டாரத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதன்படி சத்தியமங்கலம், நகராட்சி வார்டுகளில், டோக்கன் கொடுக்கப்பட்டு 1,200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் வார்டு ஒன்றுக்கு 200 டோக்கன் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், இதில் சுமார் 400 பேர் தடுப்பூசி செலுத்த முடியாமல் திரும்பிச் சென்று அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பூசிகள் செலுத்துவதற்கு காலை 6 மணி முதல் காத்திருந்த நிலையில், பிற்பகலில் போடப்பட்டதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் அவர்கள் தகுந்த இடைவெளியின்றி முந்தியடித்துக்கொண்டு தடுப்பூசி செலுத்த சென்றனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்தை வலுவானதாக மாற்ற திட்டம் - தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்