ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்திப் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து பண்ணாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்தக் கோயிலுக்கு ஈரோடு கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்துசெல்வது வழக்கம். இந்நிலையில் கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா ரத்துசெய்யப்பட்டது.
இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவுசெய்யப்பட்டு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கான கால அட்டவணை தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிவைத்து அனுமதி கேட்ட நிலையில் திருவிழா நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறும் குண்டம் திருவிழாவில் பொதுமக்கள் தீமிதிக்க அனுமதி இல்லை எனவும், பூசாரி மட்டுமே குண்டம் இறங்க அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டது.