ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய இரு கால்வாய்கள் மூலம் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுவருகின்றன.
இந்நிலையில் பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இந்தப் பகுதி விவசாயிகள் நெல் சாகுபடிக்கான ஆரம்பகட்ட உழவுப் பணிகளைத் தொடங்கிய நிலையில் கடந்த சில நாள்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் தடையுற்றன.
இந்நிலையில் தற்போது மழை பாதிப்பு குறைந்துள்ளதால் விவசாயிகள் மீண்டும் நெல் நடவுப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, கோபிசெட்டிபாளையம், பாரியூர், புதுக்கரைபுதூர் ஆகிய பகுதிகளில் உழவுப் பணிகள் முடிந்த நிலையில், நடவு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.
தற்போது ஏடிடி 40, ஏஎஸ்டி 16 ஆகிய நெல் ரகங்களைப் பயிர் செய்துவருவதாகவும், நடவு செய்த நாளிலிருந்து 120 நாள்களில் பயிர் செய்த நெல் அறுவடைக்குத் தயாராகும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 200 ஏக்கர்... அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்மணிகள் வெள்ள நீரில் நனைந்து சேதம்