ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று பதிவானது. கரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதைத் தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.
அங்கு பணியாற்றிய 170 மருத்துவர்கள், 300 செவிலியர்கள் ஆகியோர் பல்லாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 1600க்கும் மேற்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 70 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுகாதாரத் துறையினர் மாவட்டம் முழுவதும் கரோனா பாதித்த நபர்களை கண்டறிந்து 15 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு 33 ஆயிரத்து 330 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 66 ஆயிரத்து 800 நபர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்து 740 களப்பணியாளர்கள் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட அனைத்து வித நோய்த்தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, புதிய நபர்களுக்கு நோய் பரவுவது வெகுவாக குறைந்தது.
அதேபோல், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக பெருந்துறையில் சிகிச்சை பெற்று வந்த 70 நபர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 69 பேர் முற்றிலும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். இதன் காரணமாக சிவப்பு டூ ஆரஞ்சு நிறத்திற்கு ஈரோடு மாற்றப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிருந்தனர். தடையை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீதும் காவல் துறையினர் அபராதம் விதித்து வந்தனர். கடந்த 21 நாட்களாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லாததால் ஆரஞ்சு நிற மண்டலமாக இருந்த, ஈரோடு மாவட்டம் பச்சை நிற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஊரடங்கு உத்தரவு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட போதும் மாவட்டம் முழுவதும் தளர்வு அறிவிக்கப்பட்டது. இரண்டு சக்கர வாகனங்கள் செல்வதற்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படாததால் அதிகாலை முதலே வெறிச்சோடிக் காணப்பட்டிருந்த சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. தனிக்கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் வழக்கம்போல் பொருள்களை வாங்கிச்சென்றனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கூறுகையில், "கடந்த 21 நாட்களாக எந்தவித நோய்த் தொற்றும் ஏற்படாததால் ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக மாறியுள்ளது. ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏற்கெனவே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதுபோல் மே 17ம் தேதி வரை தொடரும்" என்றார்.
இதையும் படிங்க:சென்னையை வெளுத்து வாங்கும் வெயில் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு