ஈரோடு :அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க கோரி ஜூலை 29ல் உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம்,தாய்லாந்து ,சீனா ரஷ்ய உள்ளிட்ட 13 நாடுகளில் புலிகள் வாழ்கின்றன. கடந்த 2022 கணக்கின் படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3167 ஆக உள்ளது இது உலக புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவிதம் ஆகும். அதிலும் புலிகளின் புகலிடமாக விழங்குவது சத்திய மங்கலம் புலிகள் காப்பகம்.
இந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1409 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. முன்பு யானைகள் சரணாலயமாக இருந்த இந்த வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது.ஆரம்பத்தில் புலிகளின் எண்ணிக்கை 10 -க்கும் அதிகமாக இருந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. WPF எனப்படும் உலக வனஉயிரின நிதியத்தின் அறிவுரைப்படி புலிகள் காப்பகம் கோர் மற்றும் பஃபர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை 22 ஆக இருந்தது. பின்னர் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது 83 புலிகள் உள்ளன . அதனைத் தொடர்ந்து புலிகளை பாதுகாக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு, கணினி மயமாக்கப்பட்ட ரோந்து பணிகள் , புலிகள் வேட்டையாடுதல் தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கையாக புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.