ஈரோடு:சூரம்பட்டி நான்குரோடு அருகில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவில் சில பத்திரிகைகள் பிரதமரின் உண்மைத் தன்மையை மறைத்து, அரசுக்கு இணக்கமாகச் செய்தியை வெளியிட்டு வருகின்றன. மோடி அரசின் ஜனநாயக விரோத போக்கினை, உலகின் புகழ்மிக்க பத்திரிகைகள் அம்பலப்படுத்தி உள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் சுப்பராயன் பொய் பரப்பும் மோடி அரசு
தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில், ஒன்றிய அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள், மக்களவையில் கேள்வி எழுப்பக் கடமைப்பட்டுள்ளனர். தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில், நீதி விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும்.
வாக்களித்த மக்களையே தொலைபேசி வாயிலாக வேவு பார்ப்பது பெரும் கண்டனத்துக்குரியது. டீசல், பெட்ரோல் விலையின் அபரிமிதமான விலை ஏற்றம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்காமல், மக்களவையை முடக்கியது ஒன்றிய அரசு.
மக்கள் விரோத மோடி அரசு, பொய்யை மட்டும் பரப்புகிறது. அரசின் மீதான வெறுப்பு காரணமாக, எதிர்க்கட்சிகள் முரட்டுப் பிடிவாதம் பிடிப்பதாகத் தெரிவிக்கிறது ஒன்றிய அரசு. மக்கள் விரோத செயலை வெளிப்படுத்திய தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்துகின்றனர்.
பணிநிரந்தரத்துடன் ரூ.15 ஆயிரம் ஊதியம்
மேட்டூர் அணையின் காவிரி நீரை அந்தியூர், பவானி ஆகியவற்றின் ஏரி, குளம், குட்டைகளில் நிரப்பி, நீர் கடலில் கலப்பதைத் தடுக்க வேண்டும். ஒன்றிய அரசு மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாகச் செயல்படுகின்றது. ஆகையால், மோடி அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்கக் கூடாது. மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் உட்கட்டமைப்புகளை ழுமுமை பெறச் செய்ய வேண்டும். இதில் ஈடுபடவுள்ள ஆஷா பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்து, ரூ. 15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்.
மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறை கைவிடப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரங்களின் மக்கள் எண்ணிக்கை பெருக்கத்தால், உள்ளாட்சி அமைப்பு சுகாதாரத்துறையினர் வேலைப்பளு அதிகரித்துள்ளது.
தடுப்பணை திட்டத்தை நிறுத்துக
பெரிய நகரங்களில் சுகாதாரத் துறையினர் எண்ணிக்கையைப் பெருக்கிட வேண்டும். முறைகேடுகளைச் செய்வதற்காகவே திட்டங்கள் தீட்டிய அரசு அதிமுக அரசு. ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை திட்டத்தை நிறுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி பணிகளைத் தனியாருக்குக் கொடுக்கக் கூடாது” என்றார்.
இதையும் படிங்க:திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை