ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணை ஈஸ்வரன் என்ற சட்டமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணை கீழ்பவானி கால்வாய் 200 கி.மீ தூரத்திற்கு மண் கால்வாயாக வெட்டப்பட்டது.
இந்த அணையிலிருந்து வெளியேறும் நீரின் மூலம் கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்த பவானிசாகர் அணை தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாகவும் ரஷ்யாவில் உள்ள மண் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாகவும் திகழ்ந்து வருகிறது. தற்போது இந்த அணையிலிருந்து முக்கியமான வாசகப் பகுதியாக இருந்து வருவது கீழ்பவானி பாசனம்.
இந்த கீழ்பவானி பாசனம் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது. கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூபாய் 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கான்கிரீட் திட்டப் பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாகப் பிரிந்து, கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் பிரச்சனைத் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கான்கிரீட் திட்டப் பணிகளைத் துவங்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.