ஈரோடு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகனான திருமகன் ஈவேரா, நேற்று (ஜன.4) மாரடைப்பு காரணமாக, தனது 46 வயதில் உயிரிழந்தார். திருமகன் ஈவேரா கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரான யுவராஜை விட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமகன் ஈவேரா சட்டமன்ற உறுப்பினராக தனது பணியை சிறப்பாக செய்து வந்தார்.
இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னை சென்ற திருமகன் ஈவேரா நேற்று (ஜனவரி 4) காலையில் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார். திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், திருமகன் ஈவெராவின் உடல் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தகவலறிந்து ஈரோடு விரைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது மகன் உடலை பார்த்து கதறி அழுதார். அரசியல் தலைவர்கள் பலரும் திருமகன் ஈவேராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.