ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் செல்லும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்களில் முதல்போக சாகுபடியில் தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில் புல்லப்பநாயக்கன்பாளையம், கள்ளிப்பட்டி, நஞ்சைபுளியம்பட்டி, கூகலூர், புத்துக்கரைப்புதூர் உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க அரசாணை வெளியிப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 22 தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப்பகுதிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்கிவைத்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, தற்போது மழைக்காலம் என்பதால் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் நெல்களை உரிய முறையில் பாதுகாத்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்தனர். அதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.