ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள அதிமுக கட்சித் தொண்டர்களுக்கு விருப்ப மனுக்களை வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானி, சத்தியமங்கலம், நம்பியூர், தாளவாடி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான தொண்டர்கள் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறுகையில், "உலக சாதனையில் இடம்பெறும் வகையில், பத்து லட்சம் மாணவர்கள் ஒரே இடத்தில் நெகிழி ஒழிப்பது குறித்து ஒன்றிணைந்து உறுதிமொழிகள் ஏற்றனர். மாணவர்களின் நலனுக்காக ஒவ்வொரு வகுப்பு முடிந்தவுடனும், 10 நிமிடங்கள் குடிநீர் அருந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்துவதற்கு நேற்று முதலமைச்சரின் உத்தரவின்படி அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு விநியோக நிகழ்ச்சி மேலும், விளையாட்டுக்காக வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல், மாணவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக யோகா பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக விளையாட்டை ஊக்கப்படுத்துவதற்காக ரூ.76 கோடியே 32 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் டிசம்பர் இறுதிக்குள் ஊராட்சி மன்றங்கள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!