வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி ஈரோடு:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, இன்று (ஜன.4) முதல் செயல்படத் துவங்கியுள்ளது. அந்த வகையில், நசியனூரில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தின் திறப்பு விழா, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா தலைமையில் நடைபெற்றது.
இதில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, “ஈரோடு மாவட்டத்தில் 6 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளது.
கீழ்பவானி பாசனத்தையொட்டி, மேலும் 51 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையங்களில் ஏ கிரேட் ரகத்தைச் சார்ந்த ஒரு கிலோ நெல்லுக்கு 23.10 ரூபாயும், பொது ரகத்திற்கு 22 ரூபாயும் கொடுக்கப்படுகிறது.
மேலும், விவசாயிகளுக்கு குறைகள், கோரிக்கைகள் இருந்தால், அவற்றைத் தீர்க்க ஆட்சியர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கீழ்பவானி கால்வாய் விவகாரத்தில், திட்டத்திற்கு எதிரான விவசாயிகளை அழைத்துப் பேசியதில் தவறில்லை. நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதமாக எதுவும் செய்யவில்லை. இருதரப்பு விவசாயிகளிடம் நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் முடிவு, நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டுதான் இருக்கும்.
மேலும், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் 16 குளங்கள் சோதனையோட்டம் நடைபெற்று, ஒரு வாரத்திற்குள் பணிகள் முடிவடையும். மேலும், டாஸ்மாக் கடைகள் அனுமதி இன்றி செயல்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து பல டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரோட்டில் 8 டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
இதையும் படிங்க:சென்னை கத்திப்பாரா போன்று திருச்சியிலும் சாலை அமைக்கப்படும் - மேயர் அன்பழகன் தகவல்!