ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக, நீர்நிலைகளில் மழை வெள்ளம் ஏற்பட்டு, அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மல்லிகை நகர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே செல்லும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மழை வெள்ளம் அதிகரித்ததன் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இணைந்து, மழைநீர் வடிகால் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஜேசிபி இயந்திரம் கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணியானது துரிதமாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு போதுமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழைநீர் வடிகால் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மல்லிகை நகர் குடியிருப்பு பகுதிகளில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது பொதுமக்கள் கோரிக்கையைக் கேட்டறிந்தார்.