ஈரோடு மாவட்டம் பவானி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கேசரிமங்களம், கல்பாவி, சிங்கம்பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் தார்ச்சாலைகள் அமைத்தல், குடிநீர்த் தொட்டிகள் அமைத்தல், புதிய மேம்பாலங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் 3 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்குவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து பின்னர் நலத்திட்ட பணிகளைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து கேசரிமங்கலம் பகுதியில் உள்ள கூத்தம்பட்டிக்கு காரில் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த பொதுமக்களைப் பார்த்து, வண்டியிலிருந்து கீழே இறங்கியவர் அவர்களிடம் பிரச்னைகள் குறித்து கேட்டார்.
அப்போது கூத்தம்பட்டி கிராம மக்கள், தங்கள் பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைப்பதற்கு முன், சமீபத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாலத்தைச் சீரமைத்துத் தர வேண்டும் என்றும், இப்பகுதியில் மழை பெய்தால் மழைநீர் பாலத்தின் அடியில் செல்ல முடியாமல் தேங்கி வீடுகளுக்குள்ளும், விவசாய நிலத்திற்குள்ளும் நுழைவதால் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.