ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. கடம்பூர் மலைப்பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள குன்றி, சின்ன குன்றி உள்ளிட்ட மலை கிராமங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் சின்ன குன்றி கிராமத்தில் பட்டா நிலத்தையொட்டி உள்ள மானாவாரி நிலம் அருகே நீண்ட தந்தங்களுடன் 25 வயதுள்ள ஆண் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி வனத்துறை கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், ஆண் யானை மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக யானை இறந்த இடத்தின் உரிமையாளர்களான விவசாயிகள் கெண்டன் 40, சிவராஜ் 42 மற்றும் மோகன் 38 ஆகிய 3 பேரும் தங்களுக்கு சொந்தமான விவசாய தோட்டங்களில் வனவிலங்குகள் புகாமல் இருக்க மின் வேலி அமைத்து அதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின் வேலியில் சிக்கி இறந்ததும் தெரிய வந்தது.