தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Maha shivratri: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன் - etv bharat tamil

மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் அருகேயுள்ள வனப்பகுதி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Maha shivratri
மஹா சிவராத்திரி

By

Published : Feb 19, 2023, 2:03 PM IST

Maha shivratri: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன்

ஈரோடு:சத்தியமங்கலம் அருகே விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தொட்டம்மா, சின்னம்மா மற்றும் மஹாலட்சுமி என்ற கோயில்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சிவராத்திரி விழாவையொட்டி சனிக்கிழமை மாலை கிராம தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விழா தொடங்கியது.

கிராமத்தில் உள்ள பொது மக்கள் பாரம்பரியமாக குலதெய்வங்களிடம் அருள் கிடைக்க வேண்டி வழிபட்டனர். அருள் கிடைத்த பக்தர்கள் தாங்களாகவே சுவாமி முன் குவித்து வைக்கப்பட்ட தேங்காய்களை எடுத்து தங்கள் தலையில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பவானி ஆற்றுக்கு அம்மனை அழைப்பதற்காக புறப்பட்டுச் சென்றனர்.

அங்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆற்றங்கரையிலும் அருள் வந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தனர். பின்னர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் என நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர்.

மேலும் இரவு முழுவதும் கண்விழித்து மஹாசிவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினர். விடிய விடிய நடந்த விழாவில் ஈரோடு, கோவை மாவட்ட கிராமங்களிலிருந்து பொது மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிராமத்தில் மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கால்நடைகள் நோயின்றி வாழவும், தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது ஐதீகம் என அந்த ஊர் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Maha shivratri: தஞ்சை பெரிய கோயிலில் விடிய விடிய நடைபெற்ற நாட்டியாஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details