கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்புத் திட்டங்களின் கீழ் உதவிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் பாதிப்புக்குள்ளாகியுள்ள மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு மாவட்டந்தோறும் செயல்பட்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் சார்பில் கரோனா சிறப்புக் கடனுதவித் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மகளிர்கள் 6 மாதங்களுக்கு வட்டியும், மாதத் தவணையும் செலுத்தத் தேவையில்லை. 6 மாதங்களுக்கு பிறகு குறைந்த வட்டித் தொகையும், மாதத் தவணைகளையும் செலுத்திட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளுடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் மூலம் கரோனோ கடனுதவித் திட்டத்தின் கீழ் கடன் தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி மொடக்குறிச்சியில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மொடக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, எழுமாத்தூர், அறச்சலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 72 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 897 பெண்களுக்கு 44 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டன.
கடன் தொகைக்கான காசோலைகளைப் பெற்றுக்கொண்ட மகளிர் சுயஉதவிக் குழுவினர் அரசு வழங்கியுள்ள இந்தக் கடன் தொகையை தொழில் மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதாகவும் ஆறு மாதங்களுக்கு கால அவகாசம் கொடுத்ததற்கு நன்றிகளை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது ஆறு மாதங்களுக்கு பிறகு முறையாக கடனுக்கான வட்டியையும், தவணைத் தொகையையும் செலுத்துவோம் என்று மகளிர் சுய உதவிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.