ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலை கிராமங்களில், இரவு நேரத்தில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து உழவர்கள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொல்வது தொடர்கதையாக உள்ளது.
மேலும் தாளவாடி நகர்ப்பகுதியை ஒட்டியுள்ள நேதாஜி நகர், ஒசூர், தொட்டகாஜனூர், மெட்டல்வாடி, சூசையபுரம், பீமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செயல்படாத கல்குவாரி பகுதிகளில் சிறுத்தைகள் பகல் நேரத்தில் பதுங்கிக் கொண்டு, இரவு நேரத்தில் குவாரியை விட்டு வெளியேறி வேளாண் தோட்டங்களில் நடமாடுகின்றன.
இந்நிலையில் நேதாஜி நகரை ஒட்டி அமைந்துள்ள கல்குவாரி கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளன. இந்தச் செயல்படாத கல்குவாரியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. சிறுத்தை நடமாட்டத்தை இப்பகுதி மக்கள் நேரில் பார்த்துள்ளனர்.