ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகள் அதிகளவில் உள்ளன. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாடுவதால், இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. பகலில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திம்பம் ஆறாவது பாதையில் சிறுத்தை ஒன்று ’ஹாயாக’ சாலை ஓரத்தில் அமர்ந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், வாகனத்தை ஓட்டியபடி செல்போனில் படம் பிடித்தனர்.
அதேபோல, மற்றொரு சிறுத்தை சாலையில் இருந்து திம்பம் வனத்துக்குள் நடந்து செல்வதை போலவும் வீடியோ வெளியாகி உள்ளது. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மலைப்பாதையில் படுத்திருக்கும் சிறுத்தை இதனிடையே, திம்பம் மலைப்பாதை மலைச்சரிவில் ஏறமுயன்ற மற்றோரு சிறுத்தை தவறிவிழுந்து உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக சிறுத்தையின் உடலை கைப்பற்றி தலமலை வனத்துறையினர் ஆய்வுசெய்து வருகின்றனர்.
திம்பம், பண்ணாரி வனத்தில் மான்கள் அதிகளவில் இருப்பதால் அதனை வேட்டையாட சிறுத்தை சாலையை கடந்துசெல்வது வழக்கம். அப்போது திம்பம் மலைப்பாதையில் உலாவிய ஐந்து வயதுள்ள பெண் சிறுத்தை, 11ஆவது வளைவில் உள்ள மலைச்சரிவில் ஏறமுயன்றபோது மரக்கிளையில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிறுத்தையின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியதால் இரு தினங்களுக்கு முன் சிறுத்தை இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெண் சிறுத்தை மர்மமான முறையில் உயரிழப்பு: வனத்துறையினர் விசாரணை!