சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த ஜனவரி 4 அன்று உயிரிழந்தார். இதனால் பிப்ரவரி 27 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளை முடுக்கி விட்டன.
இதன் அடிப்படையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, ஒற்றைத்தலைமை விவகாரத்தால் பிரிந்துள்ள நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இரு தரப்பிலும் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக அறிவித்தனர்.
மேலும் இரு தரப்பினரும் பாஜகவிடம் ஆதரவு கோரின. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலையும் ஏற்பட்டது. எனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக, தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பு 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. அதேநேரம் நேற்று பாஜக செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன், ‘பாஜகவின் நிலைப்பாட்டுக்கு அதிமுக காத்திருக்கட்டும். அதில் தவறு ஒன்றும் இல்லை’ என கூறியிருந்தார். இந்த நிலையில் அதிமுக சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அஇஅதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு எனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலான வேட்பாளரும் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாமக, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடவில்லை என்று அறிவித்தது. அதேநேரம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாஜகவின் நிலைப்பாட்டிற்கு அதிமுக காத்திருக்கட்டும்; தவறு ஒன்றும் இல்லை - நாராயணன் திருப்பதி