ஈரோடு: தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆகியவை அங்கம் வகித்து, 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அதில் பாஜக 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் அதிமுகவை பற்றி அவ்வப்போது விமர்சித்து பேசி வந்தார்.
இது கூட்டணியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் அண்ணாவைப் பற்றி விமர்சித்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்த ஆலோசனைக்கு பிறகு, 2026 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என கூறி அறிவித்து, பாரதிய ஜனதா கட்சியுடன் ஆன கூட்டணியை அதிமுக முறித்து கொண்டது.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருவரெட்டியூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் அதிமுக பொதுகூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய அதிமுக பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி. கருப்பண்ணன் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது, "பாஜக கூட்டணிக்காக எவ்வளவோ அனுசரித்து பார்த்தோம். கூட்டணி வேண்டும் என்பதற்காக எவ்வளவோ இறங்கிப் போனார்கள், அதற்கு காரணம் மத்திய அரசு, அதிமுக ஆட்சியில் இருக்கும் போது அதிக பணம் கொடுத்துள்ளனர். ஆனால் இன்றைக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு சின்ன பையன், எடப்பாடியின் அரசியல் வாழ்க்கையை விட அவரது வயது குறைவு.