கர்நாடக பந்த் காரணமாக மாநில எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் ஈரோடு: காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சனை காரணமாக கன்னட அமைப்புகள் இன்று (செப்.29) கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கன்னட அமைப்புகளைச் சேர்ந்த வட்டாள் நாகராஜ், சாரா கோவிந்து, ப்ரவீன் ஷெட்டி ஆகியோர் முழு கடை அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சில அமைப்புகள் தார்மீக ரீதியில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், கர்நாடகத்தில் நடைபெறும் முழு அடைப்பை முன்னிட்டு நேற்று (செப்.28) இரவு பெங்களூரு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. காவிரி பிரச்னையில் ஏற்கனவே கடந்த செவ்வாய் அன்று கன்னட அமைப்புகள், தலித் அமைப்புகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் பெங்களூருவில் முழு கடை அடைப்பை கடைபிடித்தனர்.
அந்த பந்த்தின்போது வட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் பெங்களூரு வீதிகளில் பேரணி நடத்தினர். கன்னட திரைப்பட சங்கம் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திரைப்படத்துறை சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் ரயில்கள், விமானங்கள், தரை போக்குவரத்து என அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும் என வட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் முழு கடை அடைப்பை ஒட்டி அசம்பாவிதங்கள் தடுப்பு நடவடிக்கையாக இரு மாநில எல்லையான தாளவாடி எத்திக்கட்டை, குமிட்டாபுரம், பாரதி நகர், ராமபுரம், காரப்பள்ளம் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடிகளில் தமிழக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம், ஈரோடு, கோவையில் இருந்து மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் ஆகிய வழித்தடத்தில் இயக்கப்படும் 9 தமிழக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழகம் கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சத்தியமங்கலத்தில் இருந்து மாநில எல்லையான தாளவாடிக்கு புளிஞ்சூர் வழியாகச் சென்று வந்த அரசு பேருந்துகள் இன்று (செப்.29) தமிழக எல்லைக்குள் உள்ள தலமலை வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. தாளவாடி செல்லும் காய்கறி வாகனங்களும் தலமலை சாலையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கர்நாடகத்தில் இருந்து மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளுக்குக் காய்கறி லாரிகள் செல்லாததால் தக்காளி, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை தாளவாடியில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. கர்நாடகத்துக்கு அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதால் சத்தியமங்கலம், தாளவாடி பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
மேலும், பாதுகாப்பு கருதி நள்ளிரவு முதலே கர்நாடக செல்லும் சரக்கு வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பண்ணாரி, ஆசனூர், திம்பம் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க:Karnataka Bandh: கர்நாடகாவில் இன்று பந்த்.. தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கம்!