ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் அடுத்து அமைந்துள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் காளிதிம்பம் வனக்கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதி மக்கள் ராகி, சோளம், பீம்ஸ் பயிரிட்டு வருவாய் ஈட்டிவருகின்றனர். திம்பம் தலமலை சாலையிலிருந்து சுமார் 2 கி.மீ. துரம் அமைந்துள்ள இந்தக் கிராமத்துக்குச் செல்லும் பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் தினந்தோறும் அச்சத்துடன் மக்கள் செல்ல வேண்டியுள்ளது.
வன விலங்குகளுக்கு இடையூறின்றி சாலை வசதி கேட்கும் மக்கள்!
ஈரோடு: திம்பம் அடுத்து அமைந்துள்ள காளிதிம்பம் வனக்கிராமத்தில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், சாலை வசதியை ஏற்படுத்தித் தந்தால், வனவிலங்குகளுக்கு இடையூறின்றி பயணிக்க இயலும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதுள்ள சாலை ஜல்லிகற்களால் அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயப் பொருள்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் கூடுதல் பணம் வசூலிக்கின்றன. மேலும், சாலை வசதியில்லாத காரணத்தால் பாதுகாப்புக் கருதி அரசுப் பேருந்துகள் வந்து செல்வதில்லை. எனவே சிறுத்தைகள், புலிகள், யானைகள் நடமாடும் இப்பகுதியில் ஆபத்தான சூழலில் சிகிச்சை பெற முடியாமல் போகிறது. இப்பகுதியில் சாலை வசதியை அலுவலர்கள் ஏற்படுத்தித் தந்தால், வனவிலங்குகளுக்கு இடையூறின்றியும், பாதுகாப்பாக பயணிக்கவும் இயலும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.