24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால், வேலைவாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பும் இணைந்து இன்று வேலைவாய்ப்பு முகாம் நடத்தினர்.
இந்த முகாமினை ஈரோடு மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.வி. ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில், பணியாட்களை தேர்வு செய்வதற்காக 140 நிறுவனங்கள் பங்கேற்றனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பொறியியல் பட்டம் முடித்த பட்டதாரிகள் வரை மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
வேலைவாய்ப்பு முகாம் காட்சிகள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், கணக்கு பதிவாளர், அலுவலக உதவியாளர், காவலர், பொறியாளர், டிரைவர் என இரண்டாயிரம் காலி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், தொழில் வணிக சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் நேர்முகத்தேர்வில் தகுதியானவர்களுக்கு பணி ஆணையை வழங்கினர்.