தனியார் மருத்துமனைகள் கரோனா கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்பது குறித்து இந்திய மருத்துவச் சங்கத்தினர் அரசிற்கு பரிந்துரை கடிதம் ஒன்றை அளித்திருந்தனர். இதுதொடர்பாக இந்திய மருத்துவச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.என். ராஜா ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்கு அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதாக ஊடகங்களில் தகவல் வந்தது.
இந்தப் புகார் அரசிற்கும் சென்றது. இதனால், கரோனா சிகிச்சைக்கு என்ன செலவாகும் என்பதை இந்திய மருத்துவச் சங்கம் வரையறுத்தது. இதில், அறிகுறி இல்லாதவர்கள் தவிர்த்து லேசான பாதிப்பு, தீவிரப் பாதிப்பு ஆகியவற்றுக்கு எவ்வளவு செலவாகும் என்ற பட்டியல் தயாரித்தோம். அரசு அறிவித்த மருந்துகள், உபகரணங்கள், பரிசோதனைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு நோயாளிக்கு ஐ.சி.யு. பிரிவில் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவர்கள், செவிலியர் ஊதியம் தவிர்த்து செலவு ஏற்படுகிறது. குஜராத் மாநில அரசும் இதே தொகையைத்தான் தெரிவித்துள்ளது. உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றை வெளியில்தான் வாங்க வேண்டிய நிலையுள்ளது. இதனை எல்லாம் அரசே வழங்கினால், இன்னும் கட்டணம் குறையும். இவையனைத்தும் மக்களிடம் சென்றுசேர வேண்டும்.
கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சென்னையில், மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தால், இன்னும் சில மாதங்களில் கரோனா நோயைக் கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் சமூகப் பரவல் அதிகரித்து, மிக மிக மோசமான சூழல் ஏற்படும். தமிழ்நாட்டில் சமூகப் பரவல் இல்லை என்று கூற முடியாது. சமூகப் பரவலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை தினமும் வருகின்ற புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அரசுக்கு உதவிசெய்ய தயாராக இருக்கிறோம். எங்களது சேவையை இலவசமாகச் செய்யத் தயாராக இருக்கிறோம். அரசும் எங்களுக்கு இலவசமாக உபகரணங்கள் உள்ளிட்டவை செய்து கொடுத்தால் இன்னும் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது.