மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் கேப்டன் பஸ் டிக்கெட் பிரச்னை ஈரோடு: ஈரோட்டில் அரசு பேருந்தில் பயணம் செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுக்கு, பயணச்சீட்டில் சலுகையை வழங்க மறுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகை குறித்து அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர், சச்சின் சிவா. இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சச்சின் சிவா டெல்லியில் வரும் 24ஆம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, அணியின் மேலாளர் ஹரி சந்திரனுடன் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வருவதற்காக, மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது, பேருந்து பயணச்சீட்டில் 75 சதவீதம் சலுகை பெறுவதற்காக தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் ஆவணத்தை அவர் காண்பித்துள்ளார். இதையடுத்து சலுகை அடிப்படையில் டிக்கெட்டை வழங்கிய நடத்துநர், பின்னர் ஈரோடு போக்குவரத்துக் கழக மேலாளர் அறிவுறுத்தல் படி, சலுகை வழங்காமல் டிக்கெட்டின் முழு தொகையான 165 ரூபாய் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சச்சின் சிவா, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏன் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய அரசு சலுகை அறிவிக்க வேண்டும்? என பேருந்தின் முன் நின்று கேள்வியெழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யுடிஐடி கார்டு (Unique Disability ID) பயன்படுத்தி அரசு பேருந்தில் பயணச்சீட்டில் சலுகை அடிப்படையில் செல்ல ஏன் அரசு ஊழியர்கள் மறுப்பது ஏன்? எனத் தெரியவில்லை.
இதற்கு அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகையை வழங்காமல் இருந்திருக்கலாம்” என தனது வேதனையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், “இதேபோன்ற சம்பவம் எனக்கு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. தற்போது மீண்டும் இந்த சம்பவம் நிகழ்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது.
இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள் குறித்து அரசு ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்தில் மாநிலம் முழுவதும் இடையூறு இன்றி பயணம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், குறிப்பிட்ட அரசு பேருந்தில் பயணச்சீட்டு விலையில் சலுகை வழங்காமல் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றப்பட்டு வரும் சம்பவம் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:நாகூர் வர உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி; திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்!