ஈரோடு இடைத்தேர்தல்; டோக்கன்களுடன் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு ஈரோடு:கிருஷ்ணம்பாளையம் பகுதியில் நேற்று (பிப்.10) 33 வார்டுகளிலும் திமுக அமைச்சர்கள் கூட்டணி கட்சியினருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு, பணப்பட்டுவாடாவிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுகவினர் டோக்கன் வழங்கி இரவில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக டோக்கன்களுடன் கார் ஒன்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அக்கட்சியின் சார்பில் பொதுமக்களை டோக்கன் அளித்து பிரச்சாரத்திற்கு அழைத்து சென்ற நிலையில், வெகு நேரம் ஆகியும் பணம் வழங்கவில்லை எனக் கூறிய பொதுமக்கள், அக்கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பொதுமக்களை அதிமுகவினர் நடத்திய பிரச்சாரக் கூட்டத்திற்கு செல்லவிடாமல் திமுகவினர் தடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை அங்கு ஏற்படுத்தியது.
ஈரோடு கருங்கல்பாளையத்துக்கு உட்பட்ட கிருஷ்ணம்பாளையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் முடிந்தும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனை வாங்கிக்கொண்டு பணப்பட்டுவாடா நடப்பதாக மாவட்ட ஆட்சியிரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உண்ணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்த பறக்கும் படையினர் திருப்பூர் மாவட்ட பதிவு எண் கொண்ட கார் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அந்த காரில் திருப்பூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் மு.சர்புதின் என்ற திமுக நிர்வாகியின் பெயர் எழுதப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. காருக்குள் இருந்த டோக்கன்களை கொண்டு பிரச்சாரத்திற்கு அழைத்து வந்து பணப்பட்டுவாடா செய்வதை உறுதி செய்வதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் (Erode East By-Election) வரும் 27ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், தேர்தல் களமானது சூடு பிடித்துள்ளது. தமிழ்நாடே இந்த இடைத்தேர்தலை உற்றுநோக்கும் வகையில் தேர்தல் காலமானது அமைந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுகவில் இரட்டைஇலை சின்னத்தில் வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவும் நேரடியாக களம் காண்கின்றனர்.
ஏற்கனவே, இந்த கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான அதிமுக வேட்பாளர் தென்னரசு இதே கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அவர் வசித்து வருகிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட போதிலும், அக்கட்சியின் வேட்பாளர் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான திருமகன் ஈவேராவிடம் தோல்வியுற்றார். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமுருகன் ஈவேரா உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை காலி இடமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து திருமகன் ஈவேரா உயிரிழந்த 14 நாட்களில் கிழக்கு சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டு இந்த இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரும் திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக களம் கண்டுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
அதிமுகவில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தென்னரசு இரட்டைஇலை சின்னத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுகவை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவினர், அதிமுகவினர் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்களை செல்லவிடாமல் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Erode By Election: ஈரோடு வந்துசேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள்