ஈரோடு:தமிழகம் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ள சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் 14 கி.மீ. தூரம் 1,548 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று (நவ.30) நடைபெற்றது.
இதில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி கே.பவானீஸ்வரி கலந்து கொண்டு கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்துவைத்தார். பின்னர் இது குறித்து பேசிய அவர், 'தமிழகத்தில் முதல்முயற்சியாக உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் மருத்துவர்கள் பங்களிப்போடு குற்றத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவதற்கு ஏதுவாக சத்தியமங்கலத்தில் 'மூன்றாவது கண்' எனப்படும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.
முதல்கட்டமாக, 250 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதில், 10-க்கும் மேற்பட்ட குற்றங்களைத் தடுக்க முடிந்தது. மேலும் பிற இடங்களில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்துள்ளது.
இதனையடுத்து அடுத்த கட்டமாக, 1,250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த கேமாரக்கள் இரவு நேரத்தில் துல்லியமாக படம் பிடிக்கக்கூடியவை. மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் தனியாக வசிக்கும் முதியோர்கள், தம்பதிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு 'காவலர் செயலி' பதிவேற்றம் செய்து கொடுத்துள்ளனர்.