ஈரோடு:தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் மொத்தம் 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதிலும், தமிழ்நாட்டில் மட்டும் 440-ஐ கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 20 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எந்த மாதிரியான பரிசோதனைகளை மேற்கொள்வது மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளில் ஒத்திகை பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை ஒத்திகை பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆம்புலன்சில் வரும் நோயாளியைக் கவச உடை அணிந்த செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொண்டனர்.