ஈரோடு: சத்தியமங்கலம் அருகேயுள்ள நாடார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (47). இவர் தனது தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்துவருகிறார்.
வடிவேலின் தங்கை சித்ரா நேற்று (செப். 26) வழக்கம்போல், வெள்ளாடுகளை அப்பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இரண்டு, இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் திடீரென வெள்ளாட்டுக் கிடாயைப் பிடித்து பைக்கில் வைத்துத் தப்ப முயன்றனர்.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் வெள்ளாட்டைத் திருடிச் சென்ற இரண்டு நபர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து அடி-உதை கொடுத்தனர். தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சத்தியமங்கலம் காவல் துறையினர், ஆடு திருட முயன்ற இரண்டு பேரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.