ஈரோடு:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டி, உக்கரம், காவிலிபாளையம் கிராமங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது.
தொடர் மழையின் காரணமாக காவிலிபாளையம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் வெள்ளநீர் சூழ்ந்தது. வெள்ளநீரால் காலை உணவுத் திட்டத்துக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சூழ்ந்துள்ளது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த முட்டைகள் சேதமடைந்துள்ளது.
பள்ளி வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மாணவர்களின் நலன் கருதி இன்று பள்ளிக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சிறு சிறு குளம் குட்டைகள் நிரம்பியதால் பள்ளம், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கு உச்கரம் அடுத்த பெரிச்சிகவுண்டன்பாளையம் பாலத்தை மூழ்கடித்தபடி சென்றதால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் வாகனப் போக்குவரத்து சீரானது. காவிலிபாளையம் சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த மழைநீர் காவலிபாளையம் குட்டைக்கு செல்வதால், குட்டை வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவானி சாகர் அணை:நீலகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்தும் நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால், இதன் காரணமாகவும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை 10 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70.96 அடியாக உள்ளது. கடந்த 3 நாட்களில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 5 அடி வரை உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 939 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கனமழை காரணமாக பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியால் மாவட்டத்தின் மற்ற அணைகளும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:பறவைகளுக்காக 40 ஆண்டுகளாக பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம்.. வியக்க வைக்கும் வேட்டங்குடி கிராம மக்களின் பாசம்!