ஈரோடு: ஈரோடு காந்திஜி சாலையில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் கடை நேற்று(ஜூன் 21) திறந்து வைக்கப்பட்டது. தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருவரும் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி கடையைத் திறந்து வைத்தனர். பின்னர் கடையில் விற்பனையையும் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, "தமிழ்நாட்டில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சுமார் 85 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பு ஏற்கும் போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சுமார் 7 கோடி ரூபாய் வருமான இழப்பில் இருந்தது. ஆனால், நாங்கள் பொறுப்பேற்ற பிறகு முதல் ஆண்டிலேயே அந்த இழப்பை சரி செய்துவிட்டு, சுமார் ரூ.10 லட்சம் லாபம் ஈட்டினோம்.
அதேபோல் கோ-ஆப்டெக்ஸில் விற்பனை அதிகரித்துள்ளது. பல கோஆப்டெக்ஸ் கடைகளை புதுப்பித்து திறந்து வைத்துள்ளோம். அந்த கடைகளில் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் தேவையும் வேறுபடும். அதனால், அந்தந்த பகுதி மக்களுக்கு ஏற்றார்போல் புதிய டிசைன்களை உருவாக்கியுள்ளோம்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் ஆயிரம் புதிய டிசைன்களை உருவாக்கியுள்ளோம். இந்த ஆண்டு கோப்டெக்ஸ் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் முன் கூட்டியே தொடங்கப்படும்.