பவானிசாகர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்டதுதான் தெங்குமரஹாடா என்ற கிரமம். இக்கிராமத்தில் சுமார் 300 வீடுகளில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இக்கிராம மக்கள் மாயாற்றைக் கடந்து பேருந்தின் மூலம் பவானிசாகர், சத்தியமங்கலத்திற்கு வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல பவானிசாகர் வனப்பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக இரு தினங்களாக தெங்குமரஹாடா கிராமத்திற்குப் பேருந்து இயக்கப்படவில்லை. இந்நிலையில் வெள்ளம் வடிந்ததால் தெங்குமரஹாடா ஆற்றங்கரையிலிருந்து பவானிசாகர் நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து எம்மட்டான் பள்ளம் என்ற இடத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி நகரமுடியாமல் நின்றது.
இதனால் பேருந்தில் வந்த பயணிகள் ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர். இது குறித்து பேருந்து நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பணிமனை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பழுதை நீக்கினர். இதையடுத்து பேருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றது.