ஈரோடு: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தனியார் அமைப்பின் சார்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகத் தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த போதிலும் பெண்களுக்கான இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். பெண்களுக்குப் பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்து விட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.
பெண்கள் தனக்காகக் கவலைப்படுவதில்லை தங்கள் குடும்பத்திற்காகத் தான் கவலைப்படுகின்றனர். ஒரு ஆண் எத்தனை வயது ஆனாலும் ஆணாகவே இருக்கின்றான். ஆனால் பெண்கள் வயதானவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். பெண்களின் வெளித் தோற்றத்தை வைத்துப் பல விமர்சனங்கள் இருந்தாலும் நம் உள்ளே இருக்கும் இரும்பு மனதில் இந்த நாட்டிற்காகச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெண்களை இரும்பு பெண்மணியாக மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
வன்முறை என்பது எந்த சமுதாயத்தில் இருந்தாலும் அது தவறு. பெண்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒருவரை நிராகரிப்பதற்குக் கூட சுதந்திரம் இல்லை, அந்த சுதந்திரம் வீட்டிலிருந்தாலும் வெளியில் இல்லை. பத்து நபர்களுக்குக் கடனுதவி வழங்கினால் அதில் மூன்று பேர் பெண்களாக இருக்க வேண்டும்.