ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த காளிதிம்பம் மலை கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் - மாதம்மாள் தம்பதிக்கு சிவரஞ்சனி, ஹரி பிரசாத் என்ற மகன், மகள் உள்ளனர்.
பெற்றோரை இழந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு!
ஈரோடு: பெற்றோரை இழந்த ஆதரவற்ற பெண்ணுக்கு, கல்லூரி படிப்பைத் தொடர்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவிக்கரம் நீட்டியதில், அந்த பெண் கோவை அரசுக் கலை கல்லூரியில் படிப்பை தொடர இருக்கிறார்.
சிவரஞ்சனி பிளஸ் டூ முடித்துவிட்டு கோவையில் உள்ள அரசு கல்லூரியில் பிஏ பொருளாதாரம் படிப்பில் சேர்ந்தார். அப்போது தாய் மாரியம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயரிழந்ததால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு காளிதிம்பம் திரும்பினார். இதற்கிடையே தந்தை சாமிநாதன் உடல் நலம் குன்றிய நிலையில், அவரும் கடந்த ஆண்டு உயிரிழந்தார். பெற்றோரை இழந்த சிவரஞ்சனி கல்லூரி படிப்பை தொடர முடியாமல் கூலி வேலை செய்து தன் சகோதரன் ஹரி பிரசாத்தை காப்பாற்றி வந்தார்.
அதன்பின், சகோதரர் ஹரி பிரசாத்தும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இது குறித்து ஊடகங்களில், சிவரஞ்சனி ஆதரவற்ற நிலையில் இருப்பது வெளியானதும் செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவியின் படிப்பைத் தொடர முன்வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இதையடுத்து சிவரஞ்சனி கோவை கலைக் கல்லூரியில் மீண்டும் பிஏ பொருளாதாரம் படிப்பில் சேர்ந்தார். மேலும் கல்லூரியில் தங்குவதற்கு விடுதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.