ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள காளிங்கராயன் பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் சன் மைக்ரோ ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் புதியதாக தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் ஒரு மாதத்தில் ஒரு லட்சம் ரூபாயாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என விளம்பரப்படுத்தி உள்ளனர்.
இந்த விளம்பரத்தை நம்பி காளிங்கராயன் பாளையம், லட்சுமி நகர், மூவேந்தர் நகர், மனக்காட்டூர், கன்னிமார் கரடு, மேம்பாலம் அடி என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஐந்தாயிரம் முதல் இருபது ஆயிரம் வரை பணம் செலுத்தி உள்ளனர்.
பணம் செலுத்தியவர்களுக்கு நேற்று இரவு (அக்டோபர் 19) பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 20) பலரும் காலையிலேயே வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதா என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததால், அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு போன் செய்தும் யாரும் எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் பலரும் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்க சென்றனர். இதில் சிலர் நிறுவனத்திற்குள் புகுந்து பொருள்களை எடுத்துச் செல்லவும் முயற்சி செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து, முறைப்படி புகார் வழங்குமாறு அறிவுறுத்தினர். மைக்ரோ ஃபைனான்ஸ் நடத்தியவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என எந்த விவரமும் தெரியாமல் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு தாங்கள் உழைத்த பணத்தை இழந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது மக்களின் அறியாமையை வெளிக்காட்டுகிறது.