ஈரோடு:ஈரோடு மாவட்டம், கொடுமுடி வெங்கம்பூர், முத்துசாமி தெருவைச் சேர்ந்த முருகையன், கரூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, கடந்த 2020 ஆம் ஆண்டு உறவினர் மூலம் ஈரோடு மாவட்டம், காசிபாளையம், நாடார் மேடு பகுதி சேர்ந்த அன்சர் பாட்சா அறிமுகமானார். மேலும் அவர், முருகையனிடம் தான் சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்து வருவதாகக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளார்.
இந்நிலையில், முருகையனின் மகன் அருண்குமார், மருமகள் ஸ்ரீ லாவண்யா படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பதைத் தெரிந்து கொண்ட அன்சர், மகனுக்கும், மருமகளுக்கும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும் அதற்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அவர் வார்த்தையை உண்மை என்று நம்பிய முருகையன், தவணைகளில் 7 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி, மகன், மருமகளின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் அன்சரிடம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் கூறியவாறு அரசு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகையன், பணம் மற்றும் சான்றிதழ் குறித்து அன்சரிடம் பலமுறை கேட்டுள்ளார். இருப்பினும் அவர் பணம் மற்றும் கல்விச் சான்றிதழ்களையும் தராமல் ஏமாற்றி உள்ளார்.