தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சூசையபுரம், தொட்டகாஜனூர், மெட்டல்வாடி, பீம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படாத கல்குவாரிகள் உள்ளன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் மலைக் கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொன்றுவிட்டு, பகல் நேரங்களில் செயல்படாத கல்குவாரிகளில் உள்ள புதர் மறைவில் சென்று பதுங்கிக் கொள்கின்றன.
இப்பகுதியில் முகாமிட்டிருக்கும் சிறுத்தைகள் தினமும் மலைக் கிராமங்களில் புகுந்து கால்நடைகளை அச்சுறுத்தி வருவதால் விவசாயிகள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.
கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்குமாறு, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, தாளவாடி, ஜீரகள்ளி வனத்துறையினர் மலைக் கிராமங்களில் செயல்படாத கல்குவாரிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதியில் மூன்று இடங்களில் சிறுத்தையைப் பிடிப்பதற்காகக் கூண்டுகளை வைத்து, தானியங்கி கேமரா பொருத்திக் கண்காணித்து வருகின்றனர்.