ஈரோடு:நீலகிரி மாவட்டத்தில் உள்ளஅவலாஞ்சி, அப்பர் பவானி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த அதிகனமழை காரணமாகப் பவானி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கூடலூர் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனவே இந்த மாயாற்று வெள்ளமும் பவானி ஆற்று நீரும் பவானிசாகர் அணையில் கலப்பதால், பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 1,564 கன அடியிலிருந்து 2,637 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம் பெருந்துறை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், அணையிலிருந்து வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 104.28 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 104.50 அடியை எட்டும் என்பதால், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட உள்ளது.