ஈரோடு: தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் கடந்த ஜூலை மாத தொடக்கம் முதல் தொடர் மழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 5 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 83 அடியாக இருந்த நிலையில், இன்று(ஆக. 3) நீர்மட்டம் 101.31 அடி எட்டியுள்ளது.
பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 101 அடியாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியவுடன் அணையில் இருந்து பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 516 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 405 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிங்க:சோத்துப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்