மீன்பிடி உரிமம் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கக்கோரி மீனவர்கள் போராட்டம் ஈரோடு: தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதி 32.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவு ஆகும். பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் மீன் பிடிப்பதற்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தனியாருக்கு டெண்டர் விடப்படும். இதன் மூலமாக மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அணையில் மீன் பிடிக்கும் பணியில் பவானிசாகர் மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கம், சிறுமுகை மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கம் போன்ற சங்கங்களைச் சேர்ந்த 622 பங்கு மீனவர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் இடையே அணையில் மீன் பிடிக்கும் உரிமம் தனியாருக்கு விடப்பட்டு டெண்டர் ஜுன் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் மீன் பிடிக்கும் உரிமத்தை தனியாருக்கு வழங்குவதை தவிர்த்து மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும், மீன்பிடி உரிமத்தை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வலியுறுத்தி அணை நீர்த்தேக்கப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபடாமல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை பவானிசாகர் மற்றும் சிறுமுகையில் உள்ள இரண்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடிக்கும் உரிமத்தை வழங்கலாம் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
எனவே, நீதிமன்ற உத்தரவின்படி மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடி உரிமத்தை வழங்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இதன் காரணமாக அணை நீர் தேக்கப் பகுதியில் மீன் பிடிப்பதற்கு மீனவர்கள் பயன்படுத்தும் பரிசல்கள் கரையோரம் கவிழ்த்து வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு இடையே தனியாருக்கு வழங்கப்பட்ட மீன் பிடி உரிமம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் அதே நிறுவனத்திற்கு மீண்டும் இரண்டு மாத காலம் மீன் பிடித்துக்கொள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம் கால நீட்டிப்பு செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மீனவர்கள் தனியாருக்கு மீன்பிடித்துக் கொடுப்பதில்லை என முடிவெடுத்து உள்ளதாகவும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகமே நேரடியாக மீன் விற்பனையில் ஈடுபட்டால் மட்டுமே மீன்பிடிக்கும் பணியில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:டாஸ்மாக் பாரில் தகராறு! ஊழியர்கள் தாக்கியதில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு பார்வை இழப்பு..