ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையத்தில் ஆண்டுதோறும் உழவர் திருநாளான மாட்டு பொங்கலன்று பசு, எருது உள்ளிட்ட கால்நடைகளின் உருவங்கள் யானை, மான் உள்ளிட்ட பலவகை வனவிலங்குகளின் உருவங்கள் மற்றும் குழந்தைகள் உருவங்களை களிமண்ணால் செய்து அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் மாதேஸ்வரன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று உருவங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேபோல் இந்தாண்டும் கால்நடைகளின் உருவங்கள் வீட்டு விலங்குகளின் உருவங்கள் மற்றும் வனவிலங்குகளின் உருவங்களை கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்து களிமண்ணால் செய்ய ஆரம்பித்து 100க்கும் மேற்பட்ட உருவங்களை வடிமைத்து மாட்டு பொங்கலான இன்று அனைத்து உருவங்களையும் தலையில் சுமந்து கொண்டையம்பாளையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள நவக்கிணறு மாதேஸ்வரன்கோயிலுக்கு எடுத்துச்சென்றனர்.